Friday, 12 August 2016

வெந்தயத்தின் குணங்களைக் கூறும் சித்த வைத்திய முறைகள்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.
ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

Friday, 17 June 2016

நெல்லிக்காய் சாதம்

செய்ய தேவையான பொருட்கள்:
 • வேகவைத்த சாதம் - 2 கப்
 • பெரிய‌ நெல்லிக்காய் -8 முதல் 10
 • காய்ந்த மிளகாய் - 4
 • கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
 • பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள் ஸ்பூன்
 • கடுகு - ஒரு டீ ஸ்பூன்
 • பெருங்காயம் - கால் டீ ஸ்பூன்
 • எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
 • கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
 • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 • சீரகம் - 1 டீ ஸ்பூன்


செய்முறை:

தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காயை ஈரம் போகத் துடைத்து அதன் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்து வரும்பொழுது சீரகம், உளுத்த‌ம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறி அடுப்பு தீயை மிதமாக்கி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி அப்பளத்தோடு பரிமாறுங்கள்.

Thursday, 9 June 2016

ஞாபக மறதி நோயை எவ்வாறு சரிசெய்யலாம்?

உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம். மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும்.
இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

 • அல்சைமர்ஸ் நோய்
 •  மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
 •  மூளைக் கட்டிகள்
 •  தலையில் ஏற்படும் விபத்துக்கள்
 • தொற்றுக்கள்
 • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
 •  அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு

உளத்தடுமாற்ற நோயானது உண்மையில், பரிவு நரம்பு மண்டலத்தின் (sympathetic nervous system) அதிகரித்த செயற்பாட்டுடன் தொடர்புடையது. மன அழுத்தம், மனநோய்கள் போன்ற மனநலக்குறைவும், உளத்தடுமாற்றம் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டிய அறிகுறிகளை அளிக்கலாம். மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தொடச்சியான தூக்கமின்மை ஆகியனவும் முதுமை மறதியை ஒத்ததான அறிகுறிகளை ஆரம்பகட்டத்தில் தரக்கூடும். சிகிச்சை மூலம், நோய் அறிகுறிகளையும், நோய் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோயாளியை தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும். அது கடினமானதும்கூட. குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயற்பாடுகளாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதிகளவில் மதுபானம் தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆகாரம் போன்றவையும் இந்நோயை தவிர்க்க உதவும்.

Thursday, 26 May 2016

மூலிகைப் பொடியின் பயன்கள்

அருகம்புல் பவுடர்: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
* துளசி பவுடர்: மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
* கடுக்காய் பவுடர்: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
* அமுக்கலா பவுடர்: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
* நெல்லிக்காய் பவுடர்: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.
* சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
* நவால் பவுடர்: சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
* வில்வம் பவுடர்: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
* வல்லாரை பவுடர்: நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
* தூதுவளை பவுடர்: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
* ஆவரம்பூ பவுடர்: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

Tuesday, 24 May 2016

வெண்டைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்: 

 • வெண்டைக்காய் - 1/2 கிலோ 
 • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
 • கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
 • சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
 • மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன் 
 • அரிசி மாவு - 1/4 டீஸ்பூன் 
 • எண்ணெய் - தேவையான அளவு 
 • உப்பு - தேவையான அளவு 


செய்முறை: 

 • முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 
 • பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 • வெண்டைக்காயில் நீளவாக்கில் உள்ளவாறு கீறிவிட்டு நடுவில் கலந்து வைத்துள்ள மசலாக்களை நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும். 
 • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் வறுவல் தயார்.

Monday, 23 May 2016

நோய்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம்

கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

Sunday, 22 May 2016

சாம்பார் பொடி செய்வது எப்படி

தேவையான பொருள்கள்:

 • துவரம் பருப்பு - 100 கிராம்
 • கடலைப்பருப்பு - 50 கிராம்
 • மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
 • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • மல்லி (தனியா) - 1/2 கிலோ
 • மிளகு - 20 கிராம்
 • சீரகம் - 20 கிராம்
 • வெந்தயம் - 5 கிராம்
 • பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

 • மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
 • இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் ககவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு:
சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.